சென்னை:

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்,  தமிழகஅரசு ஆவணணங்கள்  தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உள்ளது.

தமிழகஅரசு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்  5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நிதிமன்றம் மதுரை கிளையில், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்ப வர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என கூறி புதிய அரசாணை வெளியிட தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறை யீட்டு மனு  தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணயை தொடர்ந்து, மதுரை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தமிழகஅரசு வழக்கறிஞர்,. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், ஏற்கனவே ரூ.5,780 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. ஆனால், உயர்நீதி மன்றம் கூறியபடி,  பெரும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு மேலும் ரூ.1,980 கோடி செலவு ஆகும். அது இயலாத காரியம்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக  ஏற்கனவே தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது. அதையே 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில் கூறி உள்ளது. அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அமைச்சரவை முடிவின் படி எடுக்கப்பட்டதா? அல்லது அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவா? என்பது குறித்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை  ஆகஸ்டு 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.