புதுடெல்லி: மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, உத்திரப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டு, டெல்லியில் போராடுவதற்காக பேரணியாக வந்த விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாரதீய கிசான் யூனியன் என்ற அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளின் குழாம் ஒன்று, மத்திய அரசின் 3 புதிய சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜன்தர் மந்தரில் போராடுவதற்காக சென்றது. ஆனால், காஸிபூர் எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுடைய பிரதிநிதிகளை மட்டுமே, அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மற்றவர்கள், எல்லையிலேயே காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அவர்கள், மோடி அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்பினார்கள்.

இந்தச் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா மாநில விவசாயிகளும், குருக்ஷேத்ரா மாவட்டத்திலுள்ள பிப்லி நெடுஞ்சாலையை முடக்கி, அந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று அவர்கள் அப்போது குறிப்பிட்டனர். இதனால், அப்பகுதியில் பல மணிநேரங்களாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.