டில்லி,

டந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை யில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்தல், வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

தலைநகர் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதி சாலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் போராடி வந்தனர்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வலைதளங்களில் தமிழக எம்.பிக்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து விமர்சிக்கப்பட்டது.

அதையடுத்து, அதிமுக அம்மா அணியை சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஏற்பாட்டின் பேரில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக விவசாயிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ‘விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்’ என்று அருண்ஜெட்லி உறுதியளித்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தலைவர்  அய்யாக்கண்ணு தலைமை யில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர்  அலுவலகம் சென்று விவசாயிகள் பிரச்சினை குறித்து மனு அளித்தனர்.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விவசாயிகள் பிரச்னை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.