டில்லி,

மிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4வது நாளாக  போராட்டம் தொடர்ந்து வருகிறது.

 

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தொடர்ந்து  நான்காவது நாளாக  அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், சட்டை அணியாமல்  உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்க விட்டபடியும் சாலையோரம் அமர்ந்தும், சாலைகளில் படுத்து உறங்கியும்  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

நீதி கிடைக்கும் வரை டில்லியை விட்டு போவதில்லை என்றும்  100 நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டம் டில்லி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியையோ, அதிகாரிகளையோ கவரவில்லை என்பது வேதனைக்குரியது.

ஏற்கனவே தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக தண்ணீர் தர மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

அவர்களின் நினைவாகவும்,   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக விவசாயிகள் எந்த வித அடிப்படை வசதிகளுமின்றி,  அரை நிர்வானமாகவும்,  ஆதிவாசிகளைப் போல இடுப்பில் இலைதழைகளை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் காரணமாக,  வயதான விவசாயிகள் பலர் பட்டினியால் மயங்கி விழுகின்றனர். அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் மீண்டும் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று  4வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.

தினமும் தமிழக அமைச்சர்கள் டில்லி சென்று வருகின்றனர். ஆனால், அதில் ஒருவர்கூட தமிழக விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்துதரவில்லை என்பது கொடுமை. அவர்கள் குடிப்பதற்குகூட தண்ணீர் வசதி இல்லை என்பது பெரும் சோகம்.

50 எம்.பி.க்களை கொண்ட அதிமுக, தங்களது அணிக்காக  பலமுறை டில்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து வருகின்றனர். ஆனால், யாரும் ரோட்டில் அரை நிர்வானமாக அமர்ந்து போராடி வரும் தமிழக விவசாயிகளை பார்க்கவோ, அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவோ  முன்வரவில்லை என்பது கொடுமையான விசயம்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சாலை வழியாக செல்லும் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழக விவசாயிகளை பிச்சைக்காரர்கள் போல கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர்.

 

இது  தமிழக மக்களின்மீது மத்திய மாநில அரசுகள் கொண்டுள்ள அக்கறையின்மையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.