28வது நாளாக தொடரும் போராட்டம்: பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று முடிவு

டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய விவசாய இணைஅமைச்சர், பேச்சு வார்த்தைக்கு வரும்படி எழுதிய கடிதம் குறித்து, பேச்சுவார்த்தைக்கு செல்லலாமா என்பது குறித்து விவசாய அமைப்பினர் இன்று முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் விரோத  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில் வடமாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மாநில எல்லைகளில் அவர்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருவதால், கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின்  போராட்டம்   இன்று 28 வது நாளை எட்டியுள்ளது. நேற்றுமுதல் தொடர் உண்ணாவிரதத்தையும் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில்,  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. விவசாய அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாமா என்பது து குறித்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று முடிவு செய்ய உள்ளனர்.