டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 24-வது நாளாக தொடர்கிறது. வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், விவசாயிகள் உறுதியாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அங்கே சமைத்து, சாப்பிட்டு போராட்டங்களை தொடர்கின்றனர்.

வடமாநிலங்களில்  தற்போது கடும் குளிர் நிலவுகிறது. டெல்லியில் 4 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை  குறைவதால் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைக்கிறது. இருந்தாலும், வேளாண் சட்டங்களை மத்தியஅரசு திரும்ப பெறும் வரையில் தங்களது போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ள விவசாயிகள் உறுதியுடன் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் மத்தியஅரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதுபோல, உச்சநீதிமன்றமும், குழு அமைத்து, போராட்டத்துக்கு தீர்வு காண வலியுறுத்தி உள்ளது. இதனால், அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான முட்டுக்கட்டை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  “பிரதமர் விவசாயிகளுடன் பேச வேண்டும்,  பண்ணை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.