டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி எதிரொலியாக எழுந்த வன்முறை சம்பவங்களை அடுத்து தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களாக டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட  3 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது.  போராட்டக்களம் எதிர்பாராத விதமாக வன்முறை களமாக மாறியதால், டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதையடுத்து, டெல்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமாய்பூர் பத்லி, ரோகிணி செக்டர், ஹைதர்பூர் பத்லி மோர், ஜஹாங்கிர் புரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல் டவுன், ஜிடிபி நகர், விஸ்வவித்யாலயா, விதான் சபா மற்றும் சிவில் லைன்ஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டு உள்ளன.