திருச்சி:

நெற்றியில் நாமத்துடன், காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  நூதன போராட்டம் நடைபெற்றது.

இதைடுத்து அவர்களை அங்கிருந்து காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், நாளுக்கு நாள்  போராட்டம் வலுத்து வருகிறது.

மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  விவசாய சங்க தலைவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சியில் காவிரி ஆற்று மணலில் உடலை புதைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் இல்லாமல் வறண்டு போன காவிரி ஆற்றில், நெற்றியில் நாமம் போட்டபடி மணலில் உடலை புதைத்து போராடினர். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காததை சுட்டிக்காட்டும் வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதை குறிப்பிடும் வகையிலும் நெற்றியில் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காவல்துறையினர், அவர்களை மண்ணில் இருந்து மீட்டு கைது செய்தனர்.