விவசாயிகள் போராட்டத்தால் திணறும் டில்லி: இன்றும் பிரம்மாண்ட பேரணி….

டில்லி:

லைநகர் டில்லியில் அனைத்து மாநில விவசாயிகள் கலந்துகொண்ட பிரமாண்ட போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டில்லி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது. இன்று பாராளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது.

இன்று காலை ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்ற அலவலகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  பலர் கலந்துகொண்டுள்ளனர்.

நாடு முழுவதும உள்ள 207 விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புகுழு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு சார்பில், வறட்சி நிவாரணம், பயிர்களுக்கு குறைந்தபட்ச  விலை நிர்ணயம், பயிர் பாதுகாப்பு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி, இயற்கை சேதங்களின்போது  விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் 2 நாட்கள் போராட்டம் நடைபெறும் என  ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று முதல் டில்லியில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டில்லியில் ராம்லீலா மைதானத்தில்  நேற்று மாலை பிரமாண்ட பேரணியுடன் கூடிய போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக விவசாயிகள் டில்லியில் குவிந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளது. ராம்லீலா மைதானத்தில் இருந்து அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளார்கள். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போராட்டத்தை தடுத்தால் நிர்வாணமாக போராடுவோம் என விவசாயிகள் எச்சரித்து உள்ளதால், போராட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போராட்டத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.