டில்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

டில்லி,

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள்  கோவனத்துடன் கைகளில் மண்டை ஓடு மற்றும் மண்சட்டியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், விவசாயி களின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,

வறட்சியைப் போக்க தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் விவசாயிகளுக்கு பென்ஷன் தொகையாக மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்  போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் என ஏராள மானோர்  பிரதமர் வீட்டுக்கு செல்லும் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும்,மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாணத்து டன்  கைகளில் மண்டை ஓடு மற்றும் மண்சட்டியை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், டில்லியில் 100 நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

தமிழக விவசாயிகளின் அரை நிர்வாண, பிச்சையெடுக்கும் போராட்டம் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.