காவிரி மேலாண்மை வாரியம்: சுடுகாட்டில் பிணம்போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராகவும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக விவசாயிகள், சுடுகாட்டில் பிணம்  படுத்தும், பிணங்களுக்கு செய்வது போன்ற இறுதி சடங்குகள் செய்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்

காவிரி நதிநீர் விவகாரத்தில், 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளது.

இதன் காரணமாக  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சியான திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். விவசாயிகளும் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள்சுடுகாட்டில் பிணம்போல் படுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு  இறந்தவர்களுக்கு செய்யப்படுவதுபோல இறுதி சடங்குகளையும் செய்தும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய ச அய்யாகண்ணு, மோடி அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாயிகள் பலியானால் யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் வேதனை தெரிவித்த அவர், ஊருக்கே சோறு போட்ட விவசாயி தற்போது பஞ்சத்தில் செத்து வருவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.