சென்னை:

சென்னையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் நேற்று முதல் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் தொடங்கி உள்ளது. தொடர்ந்து 32 போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே டில்லியில் 41 நாட்கள் போராட்டம் அரை நிர்வாணம் முதல் முழு நிர்வாணம் வரை பல வகையான போராட்டங்கள் நடத்தியும் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டு சென்னை திரும்பினர்.

ஆனால், வாக்களித்தபடி பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகள் பிரச்சினை குறித்த எந்தவித முடிவும் எடுக்காததால், விவசாயிகள் மீண்டும் சென்னையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்த்திற்கு போலீசார் அனுமதி மறுத்து கடும் கெடுபிடிகள் செய்து வருகின்றனர். ஆனால்,  போலீசார் தங்களை கைது செய்தால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரித்திருக்கிறார்.

இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம்  வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் கூடலாம் என்று போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போன்ற மெரினாவில் விவசாயிகளுக்கு ஆதவாக பெரும் போராட்டம் நடைபெறும் சூழல் உருவாகும் என நினைத்து மெரினா கடற்கரையோரமும் போலீசார் குவிக்கப்பட்டு கெடுபிடி செய்து வருகினற்னர்.

அதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை பெரியகோவில் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.