போலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”

 

புதுடெல்லி :

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி படையெடுத்திருக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் டெல்லி நோக்கி முன்னேற விடமால் செய்யவும், மத்திய அரசும், மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா மாநில பா.ஜ.க. அரசும் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

அரசின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாத பஞ்சாப் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து களத்தில் நிற்கின்றனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், விவசாயி ஒருவரை போலீசார் தடியால் அடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது, இதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், அதோடு அரசின் அடக்குமுறையை கைவிட கோரிக்கை வைத்தார்.

ராகுல் காந்தியின் இந்த டீவ்ட் வைரலானதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இந்த படம் எடிட் செய்யப்பட்ட படம் என்றும், உண்மையில் விவசாயி தாக்கப்படவில்லை என்றும் கூறி ராகுல் காந்தியை விமர்சனம் செய்துவந்தனர்.

மேலும், இதுகுறித்து 3 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு, பாருங்கள், அந்த விவசாயி மீது அடிவிழவில்லை என்று கூறியிருந்தது.

இதுகுறித்து, உண்மை அறிய விரும்பிய ‘பூம்’ செய்தி நிறுவனம், இந்த படத்தில் உள்ள விவசாயியை நேரடியாக களத்தில் சென்று சந்தித்து இதுகுறித்து விசாரித்த போது.

நன்றி : பூம்

அந்த விவசாயி, தனது பெயர் சுக்தேவ் சிங் என்றும் தன்னை போலீசார் அடித்தது உண்மை தான் என்றும், தன்னை முழங்கையில் தாக்கியதாகவும் அதன் தழும்புகள் இன்னும் உள்ளதாகவும் கூறி கதறினார்.

மேலும், முதுகு மற்றும் பின்னங்காலில் அடி விழுந்ததாகவும் சிராய்ப்புகள் உள்ளதாகவும் கூறிய அவர், தான் போராட்டக்களத்தில் தான் உள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் வந்து தன்னை நேரடியாக பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதுதவிர, பா.ஜ.க. தரப்பினர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவின் முழு தொகுப்பையும் ‘பூம்’ செய்தியாளர் பார்த்ததாகவும், இரண்டு போலீசார் சேர்ந்து அந்த விவசாயியை தாக்கியதாவும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை படம்பிடித்த ஒளிப்பதிவாளரிடமும் இதுகுறித்து விவரங்கள் பெறப்பட்டதாகவும், விவசாயி மீது தடியடி நடந்தது உண்மை தான் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.