டெல்லி சலோ பேரணிக்கு செல்லும் விவசாயிகள்: எல்லையில் அமைக்கப்பட்ட கொரோனா மருத்துவ முகாம்

டெல்லி: டெல்லி செல்லும் பேரணியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கொரோனா உள்ளதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லி சலோ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த பேரணிக்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், தங்களுடன் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.  தேவையான உணவை தயார்படுத்தி கொண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனாலும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் நபர்களால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி, அரியானா எல்லை பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ய முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.