தேனி:

தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி  கொழுக்குமலை வனப்பகுதியில் தீ வைத்தது விவசாயிகள் என்ற சென்னை டிரெக்கிங் கிளப் தனது முகநூல் பதிவில் குற்றம் சாட்டி உள்ளது.

குரங்கிணி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள்,  காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதன் காரணமாக பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச்சென்ற சென்னை டிரெக்கிங் கிளப், திடீரென மூடப்பட்டு, அதன் நிறுவனர் தலைமறைவானார்.

அனுமதியின்றி டிரெக்கிங் அழைத்து சென்றதாக தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், டிரெக்கிங் கிளப் தனது பேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்து இருக்கிறது.

அதில்,  குரங்கணி சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் அனுபவமிக்கவர்க ளுடன் சென்றும் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,  ”நாங்கள் ஏற்கனவே அந்த காட்டிற்குள் சென்று இருக்கிறோம். எப்போதும் போலத்தான் அப்போதும் வனத்துறையிடம் அனுமதி வாங்கி, முறையான கட்டணம் செலுத்தி சென்றோம். மார்ச் 10ம் தேதி நாங்கள் காட்டுக்குள் எங்கள் குழுவுடன் சென்றோம்” என்றும், நாங்கள் காட்டுக்குள் சென்ற போது  தீ ஏதும் இல்லை, 11ம் தேதி திரும்பி வரும்போது பாதி வழி வரை எந்த பிரச்சினையும் இல்லை என்றும், காட்டில் தீயை பற்ற வைத்துள்ளது அந்த பகுதி விவசாயிகள் என்றும் தெரிவித்துள்ளது.