மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6வது நாளை எட்டி உள்ளது. இந் நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பதாகவும் விவசாயிகள் தரப்பு அறிவித்தது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர். வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் 32 விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டம் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்காததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து, விவசாயிகள் தரப்பில் பங்கேற்ற பிரதிநிதி சந்தா சிங் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். அரசிடமிருந்து தோட்டாக்களோ, அமைதி தீர்வோ எது என்றாலும் நிச்சயம் ஏற்போம், மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கும் திரும்ப வருவோம் என்றார் அவர்.

அனைத்திந்திய விவசாய கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் தெரிவித்ததாவது: டிசம்பர் 3ம் தேதி அரசுடன் நடைபெறவுள்ள அடுத்த பேச்சின் போது, வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம். எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார்.