பத்மாவதி விவகாரத்தால் பாதை மாற வேண்டாம் : விவசாய பிரதிநிதிகள் வேண்டுகோள்

--

டில்லி

த்மாவதி திரைப்பட விவகாரத்தால் விவசாயப் பேரணி கவனிக்காமல் போகக் கூடாது என விவசாய பிரதிநிதிகள் கூறி உள்ளனர்.

நாடெங்கும் தற்போது பத்மாவதி இந்திப் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஒரு ராஜபுத்திர அரசியை தரக்குறைவாக சித்தரித்ததாக கூறி அந்தப் படத்தை தடை செய்யவும்,  அதில் நடித்த நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பல அமைப்புகள் போராடி வருகின்றன.  இந்நிலையில் பாராளுமன்ற வீதியில் கடந்த  திங்கட்கிழமை விவசாயிகள் பேரணி நடத்தி உள்ளனர்.

இந்தப் பேரணிக்காக குஜராத்,, மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பல விவசாய சங்கப் பிரதிநிதிகள் டில்லியில் கூடி உள்ளனர்.   இது குறித்து அந்தப் பிரதிநிதிகளில் ஒருவர், “எங்கள் கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை.   எங்களின் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் எங்களின் விளை பொருட்களுக்கு சரியான விலை என்பதே எங்கள் கோரிக்கை.   நீங்கள் எங்கள் உரையை படிக்கும் இதே நேரத்தில் உணவு உட்கொண்டு இருக்கலாம்.  அந்த உணவை உற்பத்தி செய்தது உங்கள் விவசாய சகோதரன் தான்.

நாட்டில் தற்போது ஒரு திரைப்படத்தை பற்றிய விவாதம் உள்ளது.  அதை பிடிக்கவில்லை எனில் பார்க்காதீர்கள்.   பல மாநில அரசுகளும் அந்த திரைப்பட வெளியீட்டை அனுமதிப்பதா வேண்டாமா என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.   எங்களுக்குள்ள ஒரே கேள்வி பத்மாவதி திரைப்படம் முக்கியமா அல்லது உங்களின் உணவு முக்கியமா என்பதே.

நாட்டில் தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.  இதே நிலை தொடர்ந்தால் உணவு கிடைப்பதே கேள்விக் குறி ஆகி விடும்.   ஒரு திரைப்படத்துக்காக  இத்தனை நேரம் செலவழிக்கும் மக்கள் எங்கள் பிரச்னையைப் பற்றி எதுவும் கூறுவதில்லை.   அந்த திரைப்படம் வந்தாலும் வரவில்லை எனினும் உங்களுக்கு எந்த ஒரு வித்யாசமும் இல்லை.   இன்று வரை விவசாயிகள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில பிரதிநிதிகளில் வந்துள்ள பெண்  பிரதிநிதிகளில் ஐம்பது பேர் விவசாயிகளான தங்களின் கணவரை இழந்தவர்கள்.  அவர்களில் ஒரு பெண், “ஒரு இரவு நீங்கள் உணவு உண்ண அமரும் போது உங்கள் தட்டில் உணவில்லை எனில் உங்களுக்கு என்ன தோன்றும்?  உங்கள் தட்டில் உணவு இருக்க வேண்டும் என்பதற்காக நாள் முழுவதும் ஒரு விவசாயியின் குடும்பமே உழைக்கிறது.   இது வரை ஆண்ட எந்த அரசும் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.   அது மன்மோகன் சிங் அரசோ அல்லது மோடியின் அரசோ எதுவும் எங்களை கவனிப்பதில்லை.   அதே நேரத்தில் மாநில அரசுகள் தீபிகா படுகோனேவுக்கு எப்படி கொலை மிரட்டல் விடுக்கலாம் என கேள்வி கேட்பதில் மும்முரமாக உள்ளது.   தற்கொலை செய்துக் கொண்ட எங்கள் கணவரைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை.   தயவு செய்து பத்மாவதி விவகாரத்தை விடுத்து விவசாயிகளின் வாழ்வை சிந்தியுங்கள்” என கூறி உள்ளார்.

இவர்களின் கேள்விகளுக்கு எந்த அரசிடமும் பதில் இருக்காது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.