போபால்,

த்திய பிரதேச மாநிலத்தில் ஜூன் 1ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் படுத்து போராட்டம் செய்தனர்.

படுத்துக்கொண்டு யோகா செய்வது ‘சவாசனம்’ எனப்படுகிறது. இதையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நூதனமாக செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு மாநில பாரதியஜனதா அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஜூன் 1ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.   கடந்த 6ம் தேதி  மான்ட்சர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாப்பட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டக் களத்தில் படுத்துக்கொண்டு சவாசனம்  யோகா செய்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்..