செங்கம்

சென்னை முதல் சேலம் வரை அமைய உள்ள 8 வழிச் சாலை எதிர்ப்பு போராளிகள் தமிழக  முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி உள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.  இந்த வழித்தடத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்னும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.  எனவே இந்த திட்ட எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநிலம் எங்கும் தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரசாரம் செய்து வருகிறார்.  நேற்று மாலை அவர் செங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நைனாக்கண்ணுவை ஆதரித்து பிரசாரம் செய்யச் செங்கம் நகருக்கு வந்தார்.  அப்போது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டனர்.

இதையொட்டி முதல்வர் வரும் வழியான புதுச்சேரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மண்மலை கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் சாலையின் இருபுறமும் திரண்டனர்.  அவர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி இந்த 8 வழிச் சாலை திட்டத்தைக் கைவிடக் கோரி கோஷமிட்டனர்.  இதையொட்டி அங்கு பரபரப்பு எழுந்தது.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களில் வந்தோர் அவர்களைக் கலைந்து போக வைத்துள்ளனர்.  இதைப் போல் செய்யாறு அருகே உள்ள எருமை வெட்டி என்னும் சிற்றூரிலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.  இந்த ஆர்ப்பாட்டங்கள் இங்குள்ள அதிமுகவினர் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.