யூத் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. அரியானாவை சேர்ந்த ஆகாஷ் மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

akash

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (15) பங்கேற்றார். இறுதிச்சுற்று சென்ற ஆகாஷ் அமெரிக்க வீரர் டிரண்டன் கோவல்சிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை விவசாயி ஆவார். இதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில், ‘ நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினார். ஆனால், வில்வித்தையில் பயிற்சி பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும் ’ என்றார்.

இதன் மூலம் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.