டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 27வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது. ஆனால், அநத கடிதத்தில் புதியதாக ஏதும் இல்லை என விவசாய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள   3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த  நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 26வது நாளை  எட்டி இருக்கிறது. கடுங்குளிரிலும் போராட்டம் தொடர்கிறது. நேற்று முதல் தினசரி 11 பேர் கொண்ட குழுவினர் உண்ணாவிரதத்தை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு 24 மணிநேர உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளது.  இந்த  உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக, மருத்துவர்களும், செவிலியர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

விவிசாயிகளின் போராட்டம் காரணமாக, இதுவரை 33 விவசாயிகள் இறந்துள்ளனர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை  அளித்து வருகின்றனர்.

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டால், டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும், அன்று நாடு முழுவதும் மக்கள் மதிய உணவைத் தவிர்த்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் குறைகள், கவலைகள், சந்தேகங்களைக் கூறினால், அடுத்தககட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான தேதியைக் குறிக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி விஞ்ஞான் பவனில் நடத்தலாம். விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்தியஅமைச்சரின் கடிதத்தில், புதிதாக எதுவும் இல்லை; பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, ஆனால் ‘உறுதியான தீர்வு’ தேவை என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.