திருவாரூர்:

விவசாயிகளின்  தற்கொலைக்கு  தமிழக அரசுதான் காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூரில் நேற்று அவர்  செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க மத்திய அரசு ரூ.24,000  கோடி நிதி வழங்கியும் ஆறுகள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளதாக எச். ராஜா குற்றஞ்சாட்டினார்.

டில்லியில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள், மூத்த அமைச்சர்களான அருண்ஜெட்லி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் தங்களது போராட்டத்தினை தொடர்வதில் எவ்வித  நியாயமும் இல்லை என்றும் எச். ராஜா கூறினார்.

மேலும் அவர், மத்திய அரசின் பசல்பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியிருந்தால் விவசாயிகளுக்கு  வறட்சி நிவாரணமாக தற்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கிடைத்திருக்கும். விவசாயிகளும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். எனவே விவசாயிகளின்  தற்கொலை சம்பவத்திற்கு தமிழக அரசுதான் காரணம் என்று தெரிவித்தார்.