மும்பை

காராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்பு 1497 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.  அது மட்டுமின்றி தங்கள் பொருட்களுக்கு சரியான விலை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதை ஒட்டி மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த ஜூன் மாதம் விவசாயக் கடன்களை ரத்து செய்தது.  அதற்காக 41 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு சுமார் ரூ.19537 கோடி வரை பணம் செலுத்தியுள்ளது.

ஆனால் அந்தப் பணம் செலுத்துவது மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.  ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பலரின் கணக்குகளில் இப்போது தான் பணம் செலுத்தப் பட்டு வருகிறது.   இது மட்டுமின்றி விளைபொருட்களின் விலையை அரசு நிர்ணையிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.  இந்நிலையில் கடன் தள்ளுபடி அறிவிப்புக்குப் பின் 1497 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், “கடன் தள்ளுபடி என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.   கிடைத்தவர்களுக்கும் உடனடியாக பணம் தரப்படவில்லை.  அது தவிர பருத்தி விளைச்சலில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பூச்சிகளினால் பருத்திப் பயிர்கள் பெருமளவு நாசமாகி உள்ளது.   பூச்சி மருந்தை தெளிக்கும் போது விவசாயிகளில் 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அரசு அளித்த கடன் தள்ளுபடியினால் விவசாயிகள் தற்கொலை குறையவில்லை.  மாறாக அந்தக் கடன் தள்ளுபடிக்குப் பின் தற்கொலை செய்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  பூச்சிகளால் தாக்கப் பட்டுப் பாழான பருத்திப் பயிரை காக்க சரியான நடவடிகைகளை அரசு எடுக்கத் தவறி விட்டது.   அது மட்டுமின்றி பல விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்