டில்லி: டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவெடுக்க  அறிவுறுத்தி உள்ளது.
டிராக்டர் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘டில்லிக்குள் யாரை, எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்,’ என கூறியுள்ளது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 26ந்தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணி உள்பட எந்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கக் கோரி, டெல்லி காவல்துறை தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது. ‘டில்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டில்லி போலீசுக்கு உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது,’ எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.