“எங்களுக்கு கிடைத்த வெற்றி” – டெல்லியில் போராடும் விவசாயிகள் கருத்து

 

புதுடெல்லி :

டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார்.

ஆனால் இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வரும் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், “இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்தானது தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் சங்க்யுக்த் கிசான் மோர்ச்சா விடுத்துள்ள அறிக்கையில், “இங்கிலாந்து பிரதமர் இந்தியா வராதது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்துள்ள அரசியல் வெற்றி. மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ள ராஜ தந்திர ரீதியிலான தோல்வி” என குறிப்பிட்டுள்ளது.

“சர்வதேச அளவில் எங்கள் போராட்டம் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் ஆதரவை பெற்றுள்ளது” என தெரிவித்துள்ள கிசான் மோர்ச்சா “விவசாயிகள் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது” என கூறியுள்ளது.

“போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 80 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்” என்றும் அந்த அறிக்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பா. பாரதி