ஆதார விலை உயர்வு  விவசாயிகளுக்கு அரசின் துரோகம் ; விவசாய சங்கம்

டில்லி

விளை பொருட்களின் ஆதார விலை உயர்வு என்பது விவசாயிகளுக்கு அரசு செய்யும் துரோகம் என அகில இந்திய விவசாய நல சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெல் உட்பட பல விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.   நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 200 விலை உயர்த்தப்பட்டுள்ளது.   அதே போல மொத்தம் 14 விவசாயப் பொருட்களுக்கான ஆதார விலை உயர்வை அரசு அறிவித்தது.

இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   ஆனால் அகில இந்திய விவசாய நலச் சங்கம் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கை இதற்கு நேர் மாறாக உள்ளது.

அந்த அறிக்கையில், “அரசு விவசாயப் பொருட்களுக்கான ஆதார விலையை ஒவ்வொரு வருடமும் உயர்த்துவதாக சொல்லி இருந்தது.   ஆனால் அவ்வாறு உயர்த்தப் படவில்லை.    கடைசியாக அறிவிக்கப்பட்ட விலை உயர்வில் நெல்லுக்கு கடந்த 2012-13 ஆம் வருடம் ஆதார விலை ரூ. 170 ஆக உயர்த்தப் பட்டது.

அதன் பிறகு சாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும் ரூ, 50-80 உயர்த்தபடும் என பாஜக அரசு அறிவித்திருந்தது.    ஆனால் அவ்வாறு உயர்த்தாமல் விவசாயிகளுக்கு இந்த அரசு துரோகம் செய்து விட்டது.” என கூறப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவரும் சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவருமான   யோகேந்திர யாதவ், “இவ்வாறு அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்வது சரி அல்ல.  இதை மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 4 மாதங்களில் சங்கம் நாடெங்கும் 400 கூட்டங்கள் நடத்த உள்ளது.   அத்துடன் இதை எதிர்த்து வரும் 20 ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்திய பேரணி ஒன்றை சங்கம்  நடத்த உள்ளது” என தெரிவித்துள்ளார்.