சென்னை,

விவசாயிகள் போராட்டம் சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.

நேற்று முதல் விவசாயிகளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததாலும், போராட்டத்துக்கு இளைஞர்கள் ஆதரவு அளிக்க முன்வருவதாக கசிந்த தகவல்களை தொடர்ந்து, மெரினாவில் மீண்டும் எழுச்சி போராட்டம் நடைபெற இருப்பதாக வந்த தகவல்களை தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி அய்யாக்கண்ணுவை சந்திக்க வரும்படி அழைத்திருந்தார்.

இதையடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு முதல்வர் பழனிச்சாமியை கோட்டையில் சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகள் கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி,ஓய்வூதியம், கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும், கருப்பு நிலுவை தொகை குறித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், மற்ற கோரிக்கைகள் இரண்டு மாதத்திற்குள் சரி செய்வதாகவும் முதல் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் இரண்டு மாதம் கழித்து மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்குவோம் என்றும் அவர் எச்சரித்தார்.