விவசாயிகள் பிரச்னைக்கும் வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை : சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை தீர்ப்பதற்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.   அம்மாநிலத்தின் முதல்வராக அசோக் கெகலாத் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.     காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்குதல் ஆகியவை முக்கிய இடம் பிடித்திருந்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம், “நாங்கள் ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளோம்.   இதனால் விவசாயிகள் பலன் அடைவதோடு இந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்னும் நம்பிக்கையையும் அடைந்துள்ளனர்.

இந்த கடன் தள்ளுபடி மட்டுமின்றி விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.   அமைச்சரவை முழுமையாக செயல்பட தொடங்கியதும் அந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும்.     விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அந்த பிரச்னைகளை உடனுக்குடன் களைய விரைவில் திட்டங்கள் இயற்றப்பட உள்ளன.

காங்கிரஸ் வாக்குறுதி அளித்த படி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.   இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்தோலோசிக்க இருக்கிறோம்.   தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கவும் வேலை இல்லா திண்டாட்டத்தை முழுமையாக அகற்றவும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.

தற்போது அமைச்சரவை விரிவாக்க திட்டங்களில் நாங்கள் மும்முரமாக உள்ளதால் இது குறித்து உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறோம்.   புதியதாக அமைய உள்ள அமைச்சரவையில் இளைஞர்களும் இருப்பார்கள்.  அனுபவம் உள்ளவர்களும் இருப்பார்கள்.   அதற்கேற்றபடி அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.