பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சிறைவைப்பு!

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின்(பிஎஸ்ஏ) கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம், ஒரு நபரை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் வரை சிறைவைக்க முடியும்.

பரூக் அப்துல்லா தொடர்பாக எந்த விபரங்களும் வெளியாகாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா தொடர்பாக ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் அவர் பிஎஸ்ஏ சட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிறைவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் வெளியானது.

கடந்த 1978ம் ஆண்டு, ஷேக் அப்துல்லா முதல்வராக இருக்கையில் இந்த சட்டம் ஜம்மு காஷ்மீரில் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த சட்ட விதியின்படி, ஒருவரை விசாரணைகள் எதுவுமின்றி 2 ஆண்டுகள் வரை சிறைவைக்க முடியும். இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் உண்டு.