90 வது வயதில் காலமானார் 007….’’ஜேம்ஸ்பாண்ட்’’ சீன்கானரி உச்சம் தொட்ட வரலாறு..

 

“ஜேம்ஸ்பாண்ட்” சீன்கானரி உச்சம் தொட்ட வரலாறு

“இந்த ஜேம்ஸ்பாண்ட் 007- ஐ பார்த்து பார்த்து, அந்த ஆள் மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றுகிறது. அவனை கொலை செய்ய வேண்டும் போல் உள்ளது”

உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை வளைத்து வைத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் குறித்து, இப்படி ஒரு வார்த்தையை யார் கூறி இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் வில்லனாக இருப்பானோ?

இல்லை.

ஜேம்ஸ்பாண்ட் மீது இப்படி ஒரு வெறுப்பை உமிழ்ந்தது, அந்த வேடத்தில் முதன் முதலாவதாக நடித்த, சாட்சாத்- சீன் கானரியே தான்.

ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக ஜேம்ஸ்பாண்டாகவே வேஷம் போட்டு நடித்து போரடித்து போனதால், ஒரு கட்டத்தில் ’’பாண்ட் -007’’ மீது சீன்கானரிக்கு வெறுப்பு ஏற்பட்டு பினத்த நேர்ந்தது.

ஜேம்ஸ்பாண்டுக்கு நிலையான ஒரு பிம்பத்தை கொடுத்த சீன்கானரி இன்று நம்மிடையே இல்லை.

தனது 90 வது வயதில் நேற்று இறந்து போனார். கொஞ்ச நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடந்தவர், தூக்கத்திலேயே மரணத்தை தழுவியுள்ளார். இயான் பிளெம்பிங் என்ற எழுத்தாளரின் கற்பனை கதாபாத்திரத்துக்கு, உருவமும், உயிரும் கொடுத்தவர், சீன்கானரி.

இன்று ’சூப்பர்ஸ்டார்’களாக திகழும் பல நடிகர்களை போலவே, சீன் கானரியின் வாழ்க்கையும் பூஜ்யத்தில் இருந்து தான் ஆரம்பமானது.

ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க் நகரில் தாமஸ் கானரி என்ற ஏழை ஆலைத்தொழிலாளியின் மகனாக 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர், சீன் கானரி.

அவர் செய்யாத வேலைகளே இல்லை.

வறுமை காரணமாக 13 வயதிலேயே பள்ளிக்கு போவதை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் இருந்து பாலை வாங்கி வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டும்.

ஆமாம்…

‘வந்தேண்டா பால்காரன்’’ என்று அதிகாலை வேளைகளில் ஆங்கிலத்தில் பாடிக்கொண்டே பால்காரன் வேலையில் ஆரம்பித்தது,இவரது, வாழ்க்கை பயணம்.

(பின்னாட்களில் அவர் சூப்பர்ஸ்டார் ஆனபோது, எடின்பர்க் நகரின் சந்து பொந்துகளை எல்லாம் பெயர் சொல்லி அழைத்து உள்ளூர் டாக்சி டிரைவர்களை மயக்கம் அடையச்செய்தது தனிக்கதை)

சவப்பெட்டிகளுக்கு பெயிண்ட் அடித்துள்ளார்.

இளமையிலேயே கட்டுமஸ்தான உடல்கட்டு இருந்ததால், அங்குள்ள ஓவிய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாடலாக இருந்துள்ளார்.
இங்கிலாந்து கடற்படையிலும் கொஞ்சகாலம் பணியாற்றிய அனுபவம் உண்டு.

பின்னர் காசுக்காக, நாடகங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து பிரதான வேடத்துக்கு முன்னேறினார்….

’பாடிபில்டர்’ என்பதால் மிஸ்டர் யுனிவெர்ஸ் போட்டியில் கலந்து கொண்டது தான் அவர் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்கே அறிமுகமான நண்பர்கள், சீன்கானரிக்கு சினிமாவையும் அறிமுகம் செய்தனர்.

சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் நடித்தவர். எப்படி ஜேம்ஸ்பாண்ட் ஆனார்?

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தயாரிப்பாளரான ஆல்பர்ட் புராக்கோலியின் மனைவியான டானா, சீன்கானரி நடித்த ஒரு சினிமாவை பார்த்த போது, ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கணவனிடம் சொன்னார்.

ஆனால் ஆல்பர்ட் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஏன்?

எழுத்தாளர் பிளெமிங்கும், சீன்கானரி உருவத்தை பார்த்து “அதுக்கெல்லாம் இவர் சரி பட்டு வர மாட்டார்” என எள்ளி நகையாடினார்.

டானா பிடிவாதமாக இருந்ததால், உலகின் முதல் ஜேம்ஸ்பாண்டாக உருவானார், சீன்கானரி.

1962 ஆம் ஆண்டு வெளிவந்த “DR .NO” என்ற படம் மூலம் ஜேம்ஸ்பாண்டாக அவதாரம் தரித்தார். ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். ஒரு படத்திலேயே உலகம் அறிந்த ஹீரோ ஆனார். அதன் பின் நடந்தது உலகம் அறிந்த செய்தி.

‘’பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்’’ என்ற வசனத்துடன் இவர் அறிமுகம் ஆகும் போது, தியேட்டர்கள் அதிரும்.

முதன் ஜேம்ஸ்பாண்டான சீன்கானரி, மொத்தம் ஏழு படங்களில், ரகசிய போலீஸ் ஏஜெண்ட் 007 ஆக தோன்றியுள்ளார். அதன் விவரம்:

DR. NO ( 1962)
FROM RUSSIA WITH LOVE ( 1963)
GOLD FINGER ( 1964)
THUNDER BALL( 1965)
YOU ONLY LIVE TWICE ( 1967)
DIAMONDS ARE FORE EVER ( 1971)
NEVER SAY NEVER AGAIN ( 1983)

காதலர் தினத்தை தாஜ்மஹாலில் கொண்டாடினார்

சீன்கானரிக்கு பிறகு 007 ஆக அவதரித்த ரோஜர்மூர் நடித்த ஆக்டோபஸ் இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீன்கானரியின் எந்த படமும் இந்தியாவில் படமாக்கப்பட்டதில்லை.
எனினும் அவர் இந்தியாவுக்கு ஒரு முறை வந்துள்ளார்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மனைவி மிச்லின் ரோக்புரூனுடன், இந்தியா வந்த சீன்கானரி, ஆக்ராவுக்கு விசிட் அடித்து தாஜ்மஹாலை சுற்றி பார்த்துள்ளார்.

அந்த காதல் சின்னத்தை தனது காதல் மனைவியுடன் பார்த்த தினம் என்ன தெரியுமா?

காதலர் தினம்.

பின்னர் பேட்டி அளித்த சீன்கானரி “இந்த நாளை என்னால் மறக்க முடியாது. என் மனைவியுடன் காதல் சின்னமான தாஜ்மஹாலில் சில நிமிடங்களை செலவிட்டேன்” என்று குறிப்பிட்டார்.

ஜேம்ஸ்பாண்டாக, சீன்கானரி நடித்த கடைசி படம் ‘நெவர் சே.. நெவர் அகெய்ன்’.

பொருத்தமான; டைட்டில்’..

அதன் பின் அவரை ஜேம்ஸ்பாண்ட் வேடங்களில் பார்க்க முடியவில்லை அல்லவா?

அந்த டைட்டில் இன்றும் பொருந்துகிறது. சீன்கானரியை இனி பார்க்க முடியாது. NEVER AGAIN.

– பா.பாரதி