2021ஜனவரி 1ந்தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ‘பாஸ்டேக்’ கட்டாயம்!

டெல்லி: ஜனவரி 1ந்தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஜனவரி 1-ந் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை களில், சுங்கக் கட்டணம் வசூலிக்கும்போது ஏற்படும் காலதாமதத்தை தடுக்கும் வகையில்  ஃபாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறை கடந்த ஆண்டு (2019) அமல்படுத்தப்பட்டது.  இந்த கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது, செலுத்த வேண்டிய கட்டண தொகை, ரேடியோ அதிர்வலை மூலம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

இந்த நடைமுறை 100 சதவிகிதம் முழுமையாக அமல்படுத்துவதாக மத்திய போக்குவரத்துத் துறை  கடந்த ஆண்டு அறிவித்தது. அதற்கான இறுதி அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் 15வரை என்று அறிவித்திருந்த நிலையில்,  பின்னர் 2020 ஜனவரி 15ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர்  மேலும் கால அவகாசம் வழங்கிய நிலையில்,   கொரோனா காரணமாக மேலும் அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்டு முதல் பாஸ்டேக் நடைமுறை மீண்டும் கட்டாயப்படுத்தப்பட்டது. ஃபாஸ்ட் டேக் இல்லை என்றாலோ, ஃபாஸ்டேக் செயல்படா விட்டாலோ, வாகனம் ஃபாஸ்டேக் பாதையில்  நுழைந்தால் இரட்டை கட்டண வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. தற்போது இந்த நடைமுறையே இருந்து வருகிறது.

இந்த நிலையில்,  2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.