சிறையில் உண்ணாவிரதம்: மாணவி வளர்மதி மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

கேரள வெள்ள நிவாரணத்துக்காக சென்னையில் நிதி வசூலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு,  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மாணவி வளர்மதி  உடல்நலக்குறைவு காரணமாக தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளரும், இயற்கை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப் பாளராகவும் இருந்து வருபவர் சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி. ஏற்கனவே நெடுவாசல் ஹைட்ரோகார்பன்  திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என பொதுமக்களின்  போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கல்லூரி மாணவர்களிடையே துண்டு பிரசுரம் வழங்கியதாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர்மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுதலை செய்ததது.

இந்த நிலையில்  கடந்த 23ந்தேதி , சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தன் அமைப்பினருடன் சேர்ந்த  கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.  வளர்மதி தரப்பினருக்கும்  காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வளர்மதி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி, தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

“கேரள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதை தடுக்கும் தமிழக உளவுப்பிரிவை கண்டித்தும், தன்னை  வக்கிரமாக புகைப்படம் எடுத்து, தரக்குறைவாக பேசி, மார்பகத்தை பிடித்து தள்ளிய உளவுப்பிரிவு காவலர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து  பணி நீக்கம் செய்ய வேண்டும், தனக்கு  நடந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுத்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, சக தோழர்களான அருந்தமிழனை தாக்கி, ஷாஜன் கவிதாவின் கைப்பேசியை உடைத்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,  தன்னை சிறைக்கு கொண்டு செல்லும்போது தாக்கிய ஆய்வாளர் சிவராஜன், காவலர்கள் சதீஸ், கீதா மற்றும் வேதநாயகி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வளர்மதி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு  மேலாக உண்ணாவிரதம் தொடர்ந்ததால், அவரது உடல்நிலை தளர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடத்து, அரை ஸ்டான்லி மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.