துபாயில் ரம்ஜான் நோன்பு:  சகிப்புத்தன்மைக்கும் மதங்களுக்கும்  தொடர்பில்லை

துபாய்:

இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் கறிக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.  தமிழகத்தைப் பொறுத்தவரை சில நூறு எண்ணிக்கையில் இருக்கும் ஜைன மதத்தவர் கொண்டாடும் மகாவீர் ஜெயந்திக்காக ஒட்டுமொத்த தமிழகத்திலும் இறைச்சிக் கடைகளை அடைப்பதா என்பது அவர்களது வாதம்.

இது குறித்து “கீற்று” இணைய இதழின் ஆசிரியர் நந்தன், தனது முகநூல் பக்கத்தில் எழுதுயுள்ள பதிவு:    

“நம் நாட்டில் மகாவீரர் ஜெயந்திக்கு கறிக்கடைகளை மூடுவதைவிட கொடுமையான விஷயங்கள் அரபு நாடுகளில் ரம்ஜான் மாதத்தில் நடக்கின்றன.

இரண்டு ஆண்டுகள் துபாயில் இருந்திருக்கிறேன். ரம்ஜான் மாதத்தில் பகல் வேளைகளில் அனைத்து உணவு விடுதிகளையும் மூடி விடுவார்கள். 10000 திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,80,000) செலுத்தி சிறப்பு அனுமதி வாங்கிய உணவு விடுதிகளில், பார்சல் சர்வீஸ் மட்டும் அனுமதிக்கப்படும்.

மாலை 6.45க்கு நோன்பு முடிந்தபின்பே உணவு விடுதிகளில் உட்கார்ந்து சாப்பிடலாம். பகல் நேரத்தில் பொது இடங்களில் சாப்பிட்டாலோ, தண்ணீர் குடித்தாலோ 200 திராம்ஸ் (3600 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

Marketing, Servicing வேலை பார்ப்பவர்கள் தாங்கள் சுற்றும் பகுதிகளில் எங்கு பார்சல் சர்வீஸ் இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பார்சல் வாங்கி விட்டு, உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஒரு மறைவான இடத்தைத் தேட வேண்டும்.

ரம்ஜான் மாதம் என்பது வெயில் கொளுத்தும் மாதம். துபாய் வெயிலை ஒப்பிடும்போது, நமது ஊர் வெயில் எல்லாம் தூசு. அங்கு 48 டிகிரி, 50 டிகிரி என மண்டையைப் பிளக்கும். காரிலிருந்து இறங்கி, உள்ளே நுழைவதற்குள் சட்டை தொப்பலாகி விடும்.

வேலையை முடித்துவிட்டு, திரும்பவும் காருக்குள் வந்தால், கார் உள்ளே அனலாக இருக்கும். எவ்வளவுதான் ஏசியைக் கூட்டி வைத்தாலும், குளிர் பரவ 15 நிமிடங்கள் ஆகும். நீர்ச்சத்து மிகுதியாகக் குறையும். இப்படியான காலநிலையில் காருக்குள் தண்ணீர் குடிப்பதைக் கூட பயந்து பயந்துதான் குடிக்க வேண்டும்.

அரபு நாடுகளில் துபாய்தான் லிபரல் ஸ்டேட். அங்கேயே இப்படி என்றால், இதர அரபு நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். எனது முந்தைய பதிவில் சொன்னதுபோல், ‘உன் மதத்தை உன் வீட்டிலே வச்சிக்கோ’ என்று சொல்ல முடியாது. தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள் அல்லது மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை கொடுத்து விடுவார்கள்.

அனைத்து மதங்களும் மாற்று மதத்தவரின் உரிமைகளை கிள்ளுக்கீரையாகவே கருதுகின்றன. சகிப்புத்தன்மைக்கும் மதங்களுக்கும் துளிகூட தொடர்பில்லை.”

 

Leave a Reply

Your email address will not be published.