டில்லி:

2ஜி.யில் ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதிலளித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து 8 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் 2012ம் ஆண்டில் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து ரத்து செய்யப்பட்ட 122 உரிமங்களின் நிலை என்ன ஆகும் என்று தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘புலனாய்வு அமைப்பின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் கையாளப்படும். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பும், அரசும் தான் இந்த ஒதுக்கீட்டை புலன் விசாரணை செய்து தவறுகளை கண்டுபிடித்தது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற 2001ம் ஆண்டு கொள்கை 2008ம் ஆண்டில் முதலில் வந்து முதலில் பணம் செலுத்வோருக்கு முன்னுரிமை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஏலம் மூலமே அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் அலைக்கற்றை ஏலத் தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு முதல் ரூ.1.9 லட்சம் கோடியாக உயர்ந்தது’’ என்றார்.