சாத்தான்குளத்தில் காவல்துறை அராஜகம்… ஊரடங்கை மீறியதாக தந்தை, மகன் அடித்து கொலை…

சாத்தான்குளம்:

ரடங்கால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக் குடி மாவட்டம்,  சாத்தான்குளத்தில் காவல்துறை அராஜகம் எல்லை மீறி உள்ளது.  ஊரடங்கை மீறியதாக  கைது செய்யப்பட்ட தந்தை, மகன், காவல்துறையினரால்அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

காவல்துறையினரால் அடித்துக்கொள்ளப்பட்ட தந்தை மகன்

சாத்தான்குளத்தில் பஜாரில் செல்போன் கடை வைத்து வணிகம் செய்து வருபவர்   பென்னிக்ஸ் (வயது 31) கடந்த 19-ம்தேதி அன்று ஊரடங்கு நேரத்தையும் மீறி கடை திறந்திருப்பதாக கூறி, பென்னிக்ஸ் கடைக்கு வந்த காவல்துறையினர், அவரிடம்  எச்சரிக்க இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு உள்ளது.

இந்த நேரத்தில், அங்கு வந்த பென்னிக்ஸ் தந்தையும், மகனுக்கு ஆதரவாக காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ய, காவல்துறையினர் அவர்களை இரண்டு பேரையும் தாக்கி, காவல்நிலையத் துக்கு இழுத்துச்சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவர்களை, உள்ளுர் கிளை சிறையில் அடைக்க மறுத்து, சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளை சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கி, அவர்களின் நெஞ்சில் மிதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (21ந்தேதி), பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு காவல்துறையில் இருந்து அவசர தகவல்கள் வருகிறது. அதில், அவருக்கு நெஞ்சுவலி என்றும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில், பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜூக்கும் நெஞ்சுவலி என்று காவல்துறை தரப்பில் இருந்து கூற, அவர்கள் குடும்பத்தினர் பதபதைத்து, அவர்கள் எங்கே அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று வினவும் நிலையில், அடுத்த 10 மணி நேரத்திற்குள் இருவரும் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், வணிகர்களும், காவல்துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆங்காங்கே சாலைமறியல் செய்தும் போராட்டம் நடத்தியும் நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் போராட்டம் சாத்தான்குளம் மட்டுமின்றி அண்டைய கிராமங்களிலும் பரவி வருகிறது. தூத்துக்குடி வரை இந்த போராட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்  மீண்டும் பரபரப்பும், பதற்றமும் எழுந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தால் சாத்தான்குளம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.