ஜோதிடத்தை நம்பி மகனையே எரித்து கொன்ற தந்தை: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜோதிடத்தை நம்பி மகனையே தந்தை எரித்து கொன்றிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராம்கி என்பவருக்கு காயத்ரி என்ற மனைவியும், சாய்சரண் என்ற மகனும், சர்வேஷ் என்ற 3 மாத கைக் குழந்தையும் உள்ளனர். ராம்கி ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

ஜோதிடத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்ட அவர், பல்வேறு ஜோதிடர்களை சந்தித்து வாழ்க்கையின் முன்னேற்றம் ஏற்பட என்ன வழி என்று கேட்டு வந்துள்ளார்.  செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு ஜோதிடர் மூத்த மகன் சாய் சரண் இருக்கும் வரை  வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என்று கூறியிருக்கிறார். குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராம்கி மண்ணெண்ணையை எடுத்து சாய்சரண் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.  சாய்சரண் 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்துள்ளனர். இந் நிலையில், ஜோதிடத்தை நம்பி மகனையே தந்தை எரித்து கொன்றிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக  திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளதாவது: மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது!  மெய்ப்பொருள் காண்பது அறிவு – என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.