வழக்கமான பரிசோதனைக்காக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: மகன் கதிர்ஆனந்த் விளக்கம்

சென்னை: தமது தந்தை துரைமுருகன் பூரண நலத்தோடு உள்ளார், வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார் என்று கதிர் ஆனந்த் விளக்கம் அளித்து இருக்கிறார்.

திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவர், நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பெரும் பரபரப்பு எழுந்தது. இந் நிலையில் அவர் தமது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு தான் மருத்துவமனைக்கு சென்றார் என்று அவரது மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: வலைதளங்களில் என் தந்தை துரை முருகன் மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அவர் பூரண நலத்தோடு வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். பரிசோதனைகள் எல்லாம் நிறைவு பெற்றவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.