துணி துவைப்பது போல் குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தை! புகார் செய்யாத தாய்!

போதை மனிதர் ஒருவர் தான் பெற்ற குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஸ்ரீனிவாச காலனியில்  சிவா கவுட் என்பவர்  தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். சிவா, போதைக்கு அடிமையானதோடு தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சிவா , தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே ஆத்திரத்தில் வீட்டிற்குள் படுத்திருந்த குழந்தையை வெளியே இழுத்து  வந்து  அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார்.  துணியை  துவைப்பது போல் மீண்டும் மீண்டும் ர் குழந்தையை தூக்கி  ஆட்டோவில் தலைகீழாக அடித்துள்ளார். இதனால் குழந்தை அசைவற்று தரையில் கிடந்து உள்ளது. இதைபார்த்த  தயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து,  குழந்தையை  அவரிடமிருந்து பெற முயன்றனர். ஆனால் சிவா குழந்தையை தர மறுத்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த காவலர்கள்  குழந்தையை மீட்டு நீலோபர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக உள்ளது.

இது குறித்து அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிவா ஓடிவிட்டார் நாங்கள் அவரை பிடிக்க  முயற்சி செய்து வருகிறோம். இந்த சம்பவம் நடந்த போதிலும், அந்த குழந்தையின் தாய் புகார் செய்யவில்லை. ஆனால் நாங்கள் ஒரு சூ-மோட்டோ வழக்கு பதிவு செய்து உள்ளோம் என்று  தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்  சமூகஆர்வலர்கள், “தான் பெற்ற குழந்தையையே தந்தை கொடூரமாக தாக்கியிருந்தாலும், மனைவி புகார் கொடுக்க மறுப்பது ஆச்சரியமல்ல. இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கணவன் மீது புகார் அளித்து அவன் சிறைக்குச் சென்றுவிட்டால் குடும்பத்தின் நிலை என்ன ஆகுமோ என்கிற பயமும்,  என்னதான் கணவன் கொடுமைப்படுத்தினாலும் காவல்துறையில் புகார் அளிக்கக்கூடாது என்கிற பெண்ணடிமைத்தனமும் இதற்குக் காரணமாக இருக்கின்றன” என்கிறார்கள்.