மாமனார் – சிறுகதை

 

மாமனார்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

“டேய் தம்பி கந்தா, உனக்கு நேத்து காய்ச்சல்னு சொன்னியே, அதான் உனக்கு சுக்கு காபி போட்டு வந்திருக்கேன் குடிப்பா” என்று டம்ளரில் நீட்டிய பாஷா பாயைப் பார்த்துக் கொண்டே, டைல்ஸ் ஒட்டும் வேலையை சற்று நிறுத்திவிட்டு வாங்கிக்குடித்தவன்

“பாய், டீ ரொம்பத் தெம்பாயிருக்கு எனக்கு தினமுமே சுக்கு காபியே கொடுங்க பாய்” என சொல்லிவிட்டு வேலையைத் திரும்பப் பார்த்தான் அந்தத் தொழிலாளி.

பின் அங்கு வேலை செய்யும் மற்ற கட்டிடத் தொழிலாளர்களுக்கும் டீ, பிஸ்கட் கொடுத்து விட்டு கிளம்பினார், பின் ஏதோ நினைவு வந்தவராய்,

“கந்தா, எங்க நம்ப இஞ்ஜினியர் சாரை ஒரு வாரமாக் காணோம்,” என்றார்.

“அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதனால் சின்ன இஞ்சினியருங்க தான் வந்தாங்க பாய்” என்றான் கந்தன்.

“ஓ, சரி, கந்தா ரயில்வே கேட் பக்கத்திலதான வீடு? அடையாளம் கேட்டுக்கொள்கிறேன், வரேன் கந்தா” என்று சொல்லி விட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை இஞ்சினியர் வீடு நோக்கி திருப்பினார் பாஷாபாய்.

முன்புறம் கார் நிறுத்துமிடம், தோட்டம் என மூன்று மாடிகள் கொண்ட பெரிய வீடு, அவர் சற்று வசதியானவர் என பாஷாபாய் ஏற்கனவே அறிந்திருந்தாலும் கிட்டத்தட்ட அரை ஏக்கருக்கு மேலுள்ள இடத்தில் வீடு, தோட்டம் இருப்பதை சற்று நின்று பார்த்தார்.

உள்ளிருந்து குரல் கேட்டது “வாங்க டீ பாய்,” என சன்னமானக் குரலில் கூப்பிட்டார் இஞ்சினியர் சத்யன்.

“இஞ்சினியர் சார், என்ன இது ஒரே வாரத்தில் இவ்வளவு டல்லாயிட்டிங்க?” என்றார்.

“சும்மா, கொஞ்சம் காய்ச்சல், பாய், சரி, டீ பாக்கியை அலுவலகத்தில் சொல்றேன் வாங்கிக்கோங்க” என்றான்.

“சார், வெறும் காய்ச்சலுக்கா இப்படி கொடியாட்டம் துவண்டுப் போய்ட்டிங்க?” என சொன்ன போது அங்கு வந்த இஞ்சினியர் மனைவி வரன்யா.

“பாயண்ணா, நீங்கள் இவ்வளவு தூரம் கேட்கறீங்கன்னு சொல்றேன் இவருக்கு இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை, உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்னு டாக்டர் சொல்லிட்டாங்க ஆனால் தானம் கொடுப்பவர்கள் யாருடையதும் இவருக்கு சுத்தமாக சரி வரல, என்ன பண்றது?” என கண் கலங்கினாள், அப்போது அவர்களின் இரு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீடு திரும்பினார்கள்.

இதைக்கேட்டு பத்து நிமிடம் ஒன்றும் பேசாமல் இருந்த பாஷா பாய் சொல்லாமல், கொள்ளாமல் எழுந்துப் போய் விட்டார்.

அடுத்த நாள் காலை, “இஞ்சினியர் சார் கிட்னி தானம் செய்ய ஆள் வந்திருக்காங்க எங்க வரணும்னு சொல்லுங்க?” என பாஷாபாய் பேசினார்.

“அப்படியா, இதோ குழந்தைகளை எங்கள் உறவினர் வீட்டில் விட்டு, விட்டு நானும் என் மனைவியும் வருகிறோம், நீங்கள் கிரிவலப்பாதையில் நில்லுங்கள், வந்துக் கூட்டிக் கொள்கிறோம்” என சொன்னார் சத்யன்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாஷாபாயும் அவர் மனைவி சபியாவும் நின்றிருந்தனர், அங்கு வந்த சத்யன் “எங்கே பாய் டோனர்?” என்றான், “நான் தான், டோனர் வாங்கப் போகலாம்” என பெங்களுர் நோக்கி விரைந்தனர்.

இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை, பெண்மணிகள் மட்டும் பேசிக் கொண்டு வந்தனர்.

பெங்களுருவில் பாய் கிட்னி சத்யனுக்கு சரியாக இருக்கும் என மருத்துவ முடிவுகள் வெளியானதால் அடுத்த பத்து நாட்களில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

அதுவரை கிட்னி தானத்திற்கு எவ்வளவு? என்ன? என யாரும் பேசவில்லை. பின் நலமாகி ஊருக்கு வந்தனர்.

ஒரு மாதம் ஓய்வில் இருந்த சத்யன் ஒரு நாள் மனைவி இரண்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு, பாஷாபாய் வீடு நோக்கி பணத்துடனும், நன்றியுடனும் சென்றனர்.

மிகச்சிறிய ஓட்டு வீடு, முன்புறம் பாஷாபாயின் பேத்திகள் விளையாடிக் கொண்டு இருந்தனர், உள்ளே சென்றதும்.

“வாங்க சார், வாங்க, வாங்க,”

“வாம்மா” என வரவேற்றனர் பாயும் அவர் மனைவி சபியாவும்.

உடன், பாஷாபாய், “ஹமீதா, சார், அவர் மனைவி, பிள்ளைகள், வந்திருக்காங்கப்பா, அவர்களுக்கு, டிபனும் டீயும் ரெடிபண்ணும்மா” என்றார்.

“சரிங்க வாப்பா” என உணவினைத் தயாரித்தாள் அவர் பெண். ஹமீதாபேகம்.

சிறிது நேரம் பேசிவிட்டு, உணவு அருந்தி விட்டு கிளம்பும் போது ஒரு புதிய தட்டில் பல லட்சங்கள் மற்றும் இனிப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு வைத்து பாஷாபாய் மற்றும் அவர் மனைவியிடம் கொடுத்து வணங்கினர்.

அப்போது, “சார், பணத்துக்கு நான் கிட்னிய விக்கணும்னா எப்பவோ நான் வித்திருப்பேன், ஆனா நான் பணத்துக்காக செய்யல,” எனக்கண் கலங்கினார்.

“ஆமாம், சார், என் பெண் ஹமீதாவின் வீட்டுக்காரர் ஒரு வருஷத்துக்கு முன்னாடி உங்களை மாதிரிதான் உடம்பு சரியில்லாம ஆனார், எங்கள் உறவினர்கள், ஏன்…என் கிட்னி, என் மனைவி கிட்னி எதுவுமேப் பொருந்தல, காசு கொடுத்து கிட்னி வாங்கற அளவுக்கு வசதியும் இல்ல, நோயோடே அவர் இறந்து விட்டார், இப்போது ஹமீதாவும் அவளின் இரண்டு குழந்தைகளும் எங்கள் வீட்டில்” என்ற போது ஹமீதா, சபியா அம்மாள் அனைவரும் கண்கலங்கினார்கள்.

“உங்க மனைவி வரன்யாவும் என் பொண்ணு ஹமீதாவும் ஏறத்தாழ ஒரே வயசாதான் இருப்பாங்க, எனக்கு இவங்க இருவருக்குமிடையில் எந்த வித்தியாசமும் தெரியல சார்,” என்றார் நாதழுதழுத்து.

“அதனால இந்த பணத்தை எடுத்துட்டு போங்க, கிட்னி இறைவன் எனக்குக் கொடுத்த ஒரு உறுப்பு, அதனால் அதன் மேல் நான் காசு வாங்க மாட்டேன், இனிப்பு, பழங்களை மட்டும் எடுத்தக்கறேன்” என்றார்.

அது வரை வரன்யா அமைதியாக இருந்தாள், என்ன நினைத்தாளோ அமர்ந்திருந்த பாஷாபாயின் கைகளில் முகம் புதைத்து “அப்பா” என அழுதாள், அழுகையினூடே, “எனக்கு அப்பா இல்லை, நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டார், இப்பதான் அப்பான்னா எவ்வளவு பெரிய வரம்னு தெரியுது” என அழுதாள்.

“சரி, வரன்யா, நான் உன்னைய என் மகளாக ஏத்துக்கிறேன், நீ என்னைய தாரளமா அப்பான்னு வாய் நிறையக் கூப்பிடு, என் மூன்று பொண்ணுங்களோட, இனி உன்னையும் சேர்த்து இனி எனக்கு நாலு பொண்ணுங்க” என்றார் பாஷாபாய்.

எவ்வளவோ சொல்லியும் பாய் அந்தப் பணத்தினை வாங்கவில்லை.

அன்றிரவு சத்யனுக்குத் தூக்கமே வரலில்லை, ஒரு முடிவுக்கு வந்தவனாய் அடுத்த நாள் மாலை தொழுகை முடிந்த பிறகு பாஷாபாய் செல்லும் மசூதிக்கு சென்றார்.

அங்கிருந்த முத்தவல்லி, தலைவர், ஹஜ்ரத் எல்லாம் வெளியில் இருந்தத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர், அவர்களிடம் சத்யன் அறிமுகப்படுத்திக் கொண்டு, நடந்தப் பாசப் போராட்டத்தினைத் தெரிவித்தான்.

அப்போது அங்கிருந்த ஒரு நிர்வாகி,

பாஷாபாய் அவர்கள் சென்ற தலைமுறையில் மிகப் பெரிய செல்வந்தக் குடும்பம், ஏழைகளுக்குத் திருமணம், செய்துவைப்பது, தானதர்மம், ஏழைகளை புனிதப்பயணத்திற்கு செலவு செய்து அனுப்பி வைப்பது என இருந்தவர்கள் அப்படியே செல்வம் கரைந்தது, இருந்த ஒரு பெரிய வீட்டையும் தன்னுடைய மகள்கள் கல்யாணத்திற்கு விற்று விட்டார், நல்ல மனம்படைத்தவர் கண்டிப்பாக அவர் பணத்தை வாங்க மாட்டார், எனக் கூறினார்கள்.

“கெட்டாலும் மேன்மக்கள்

மேன்மக்களே,

சங்கு சுட்டாலும்

வெண்மை தரும்”

என்று படித்தது நினைவுக்கு வந்தது சத்யனுக்கு

“சரிங்கய்யா, அவர் இதுவரை புனிதப் பயணம் (ஹஜ்யாத்திரை) போயிருக்காரா?” என்றான்.

இல்லை, ஆனால் இந்த வருடம் அரசின் மானியத்தில் அவர் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றார்.

“அய்யா, அப்படியானால் ஒன்று செய்யுங்கள், யாரோ ஒருவர் தூர தொலைவிலிருந்து அவரை அனுப்பப் பணம் கொடுத்துள்ளார்கள் என்றும் அவர்கள் பெயரை தெரிவிக்க வேண்டாம் எனவும் கொடையாளர் சொன்னார்கள் என பாஷாபா யிடம் சொல்லி அவரை பயணம் அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு.

“அய்யா, நான் வேறு மதம், அவரை அனுப்பலாமா?”

அந்த நிர்வாகி சிரித்துக் கொண்டே இதெல்லாம் அவனிடும் கட்டளை, யார் மூலம், யார் செல்ல வேண்டும் என்பது அவன் ஆணை, அதனால் அனுப்பலாம், மேலும் அனைவரும் மனிதர்கள் தானே? இறைவன் ஒருவன்தானே? இதிலென்ன மதம்? என சிரித்தார் அந்தப் பெரியவர்.

“சரிங்கய்யா, ஒரே ஒரு உதவி அவரை நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினராக நினைக்கிறோம், நான் அனுப்பினேன் எனத் தெரிந்தால் என்னிடம் எப்போதும் போல பேச சங்கடப்படுவார், நான் தான் அவரை அனுப்பினேன் என எப்போதும் தெரிவிக்க வேண்டாம், நீங்கள் அவரிடம் பேசி ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

நாங்கள், நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறோம், சென்று வாருங்கள் என விடை கொடுத்தனர் அவர்கள்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் பாஷாபாயும் அவர் மனைவி சபியாவும் புனிதப்பயணம் சென்றனர், அங்கு சென்றும் இவனிடம், வரன்யாவிடம், குழந்தைகளிடம் என மாறி மாறி செல்பேசியில் பேசினார்.

பின் வந்தவுடன் நிறையப் பேரீட்சம் பழம், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை, பல் துலக்க பிஸ்வாக்குச்சி, கடல்பாசி, ஜம்ஜம் தண்ணீர் இறைவழியிட்டுக்கான மணி மாலை, சாக்லேட், தின்பண்டங்கள் என வாங்கி வந்தார், மேலும் அங்கு அவர் பார்த்த இடங்களான புனித மக்கா, புனித மதினா, மதினா ஜியாரத், சுபைதா ஆறு, சபா மற்றும் மர்வா, ஜம் ஜம் கிணறு, ஜின் பள்ளத்தாக்கு, ஸவ்ரு குகை, மக்கா மியூசியம், ஆகிய இடங்களை செல்பேசியில் காண்பித்து மகிழ்ந்தார்.

பின் கிளம்பும் போது சத்யன் “மாமா, இப்பவாவது, நான் சொல்றதைக் கேட்கணும், சரியா” என்றான்.

“என்ன மாப்பிள்ளை? சொல்லுங்க?”

“இதுவரை நீங்க டீ வித்தது போதும், இனி அலைச்சல் வேண்டாம், திருவண்ணாமலையில் மெயின் இடத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் ஹோட்டல் வாடகைக்கு விட்டிருக்கேன், அதன்முன் புறம் சிறிது இடத்தை டீக்கடையாக மாத்திட்டேன், நாளையில இருந்து நீங்க, அங்கதான் போய் தொழில் செய்யணும், ஜனசந்தடி அதிகம் அதனால உங்க “டேஸ்டு” நல்லாயிடுக்கிறால சீக்கிரமாவே “பிக்கப்” ஆயிடும், சரிங்களா?”

“மாப்பிள்ளளை, பாய்லர், ஸ்டவ் வாங்க கொஞ்சம் டைம் வேணுங்க” என்றார் பாஷாபாய், சிறிது சங்கடத்துடன்.

“அப்பா, நேத்தே எல்லாம் வாங்கி வச்சிட்டோம், நீங்கப்போய் கடையில உட்கார்ந்தாலே போதும்” என்றாள் வரன்யா, ஒரு மகளின் அதிகாரத்துடன்.

“சரிம்மா, என் பொண்ணு சொன்னா நான் மறுப்பேது சொல்லப் போறேன்? சரிம்மா நான் நாளைக்கே ஆரம்பிக்கிறேன்,” என தன் மகளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“வரேன் மாப்பிள்ளை, வரண்டா பேரக் குழந்தைகளா” என விடைபெற்றார் பாஷாபாய்.

பின் வந்த நாட்களில் தீபாவளிக்கு அவர்கள் குடும்பம் இங்கு வருவதும் ரம்ஜானுக்கு இவர்கள் அங்கு செல்வதும், ஒரு வானவில் நிரந்தரமாக வானில் இருந்தால் எவ்வளவு மகிழச்சியோ அதுபோல மகிழச்சியைக் கொடுத்தது இரு குடும்பத் தினர்க்கும். ரத்த சொந்தம் மட்டும் சொந்தமல்ல என்பதை பாஷாபாயும் சத்யனும் நிருபித்து விட்டனர் என இறைவன் அவர்களின் குடும்பத்தைப் பார்த்துப் புன்னகைத்தான்.

குறள்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்

(குறள் எண் : 218)

பொருள் :

தனது செல்வம் சுருங்கிய காலத்திலும், பிறர்க்கு உதவி செய்யும் பண்புடையார் தமது ஈகைக் குணத்தை விடார். தமது இடம், பொருள், ஏவல் ஆகிய எல்லாமே குறைந்து போனாலும் தமது இயல்பான ஒப்புரவு செய்யும் கடமையிலிருந்து விலக மாட்டார்கள்.