டிக்கட் வாங்க சொன்ன நடத்துனரிடம் குழந்தையை விட்டு சென்ற தந்தை

பேரளம்

னது இரண்டரை வயதுக் குழந்தைக்கு பயணச்சீட்டு வாங்கச் சொன்ன நடத்துனரிடம் குழந்தையை விட்டு விட்டு ஒரு தந்தை சென்றுள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ளது சீனிவாசபுரம்.   இங்கு வசிப்பவர் இதயதுல்லா.  இவருடைய இரண்டரை வயது மகன் பெயர் முகமது உசேன்.  இவர் தனது மகனுடன் அரசு பேருந்தில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு சென்றுள்ளார்.  அவர் நடத்துனரிடம் தனக்கு மட்டும் பயணச்சீட்டு வாங்கி உள்ளார்.

நடத்துனர் குழந்தைக்கும் பயணச்சீட்டு வாங்க சொல்லி உள்ளார்.   இதயதுல்லா தனது குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது என சொன்னதை நடத்துனர் நம்பவில்லை.  அவர் குழந்தைக்கு மூன்று வயதுக்கு மேல் இருக்கும் என கூறி உள்ளார்.  அதை ஒட்டி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே இதயதுல்லா தனது குழந்தையை நடத்துனரிடம் கொடுத்து விட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எடுத்து வருவதாகக் கூறி விட்டு இறங்கி வேகமாக சென்று விட்டார்.  பேருந்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்    வழியில் இருந்த பேரளம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துனர் குழந்தையை ஒப்படைந்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதற்குள் குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் இதயதுல்லா வந்துள்ளார்.   தாம் வந்த பேருந்து பேரளம் காவல் நிலைய வாசலில் நிற்பதைக் கண்டு அங்கு வந்தவர் காவல் நிலைய அதிகாரியிடம் குழந்தையின் பிறப்பு சான்றிதழைக் காட்டி உள்ளார்.  அத்துடன் சிறு குழந்தைக்கு பய்ணச் சீட்டு எடுக்கச் சொன்ன நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் அதற்கு மறுத்துள்ள்னர்.   சம்பவம் நிகழ்ந்தது மயிலாடுதுறை காவல் நிலையப் பகுதி எனவும் அங்கு தான் புகார் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.   கோபம் அடைந்த இதயதுல்லா தனது குழந்தையுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.  அவர் இதுவரை மயிலாடுதுறையில்  புகார் அளிக்கவில்லை.