தஞ்சை:

எம். நடராஜனை, தகப்பன் ஐயா என்று சீமான் புகழஞ்சலி செலுத்தினார்.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம். நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு நடராஜன் படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.

திருமாவளவன், தா.பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினரா. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:

“இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்து போராடிய ஏராளமான வீர மறவர்களில் நடராஜனும் ஒருவராவார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்வு மூன்று தினங்கள்  நடைபெற்றது. அதில் நானும் என்னுடைய துணைவியாரும் கலந்துகொண்டோம். நிகழ்வின் இறுதி நாளில்  2 லட்சம், 3 லட்சம் என்று பலரும் நிதி அளித்தார்கள்.  நான் அமைதியாக இருந்தேன். காரணம்… என்னிடம் அப்போது பணம் இல்லை. இது நடராஜனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே என்னை மேடைக்கு அழைத்துச் சென்று, “எல்லோரும் நிதி அறிவிக்கிறார்கள். நீ அறிவிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது. நீ ஐந்து லட்சம் ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துவிடு. நான் அந்த பணத்தை நெடுமாறன் ஐயாவிடம் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.

நான், “வேண்டாம்” என்று மறுத்தேன். அதற்கு நடராஜன், “நான் சொல்கிறேன் நீ நிதி வழங்குவதாய் அறிவிக்கிறாய்” என்று உறுதியான கண்டிப்பான குரலில் சொன்னார்.

அந்த நேரத்தில் என் தன்மானத்தைக் காத்த, “தகப்பன் ஐயா” நடராஜன்.

அந்த நிகழ்வு முடிந்த பிறகு என்னை அவசியம் வீட்டுக்கு மனைவியுடன் உணவருந்த வர வேண்டும் என்று அழைத்துச் சென்றார்.  உணவு பரிமாற அத்தனை பேர் இருந்தும் தன் கையாலேயே உணவு பரிமாறிய தாய் ஐயா நடராஜன் அவர்கள்” என்று உருக்கத்துடன் சீமான் பேசினார்.