மகனை கருணைக்கொலை செய்ய தந்தை மனு: கண்ணீர்விட்ட நீதிபதிகள்

னநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு வழக்கு தொடுத்த தந்தையின் மனுவைப் படித்த நீதிபதிகள் கண்ணீர்வடித்த சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமேனி – சசிகலா தம்பதியினர். இவர்களது மூத்த பிள்ளைகளான பாவனாவும், சக்தியும் இயல்பாக இருக்க, மூன்றாவது பிள்ளையான பாவேந்தனின் உடல்நிலை மற்றும் மனநிலையில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.

பாவேந்தன்  பிறந்தவுடன் மற்ற குழந்தைகள் போல அழவில்லை. மேலும் வளர்ந்த பிறகும்  உட்காருவதற்கும், எழுந்து நிற்பதற்கும்கூட  மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலை. மற்றபடி 10 வயது ஆகிவிட்டபோதும் படுத்த நிலையிலேயே இருப்பான். இப்போது வரை பேச்சு வரவில்லை. திடீரென பலத்த சத்தத்துடன் கத்துவான். எதற்காக கத்துகிறான் என்பது புரியாது.

தவிர  சிறுவன் பாவேந்தனுக்கு வலிப்பு நோயும் இருக்கிறது. அவனுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என யாராலும் கணிக்கவே முடியாது என்கின்றனர் பெற்றோர்

மகன் பாவேந்தனை குணப்படுத்த தமிழகம் மட்டுமின்றி, கேரளாவில் கோழிக்கோடு, திருவனந்தபுரம் என பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.  ஆனாலும், பாவேந்தனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

பாவேந்தனை பார்த்துக் கொள்வதற்காகவே திருமேனி – சசிகலா தம்பதி எப்போதும் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது. தையல் கலைஞரான திருமேனி, தான் நடத்தி வந்த கடையை மூடிவிட்டு  வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வேறுவழியே இல்லாமல்   திருமேனி – சசிகலா தம்பதி, பாவேந்தனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறுவனை பரிசோதிக்க குழு அமைத்தது. மத்திய சுகாதாரத் திட்ட உயர் அதிகாரி உமா மகேஸ்வரி அடங்கிய அந்தக் குழு, கடந்த வியாழனன்று அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் சிறுவன் பாவேந்தனை குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை படித்துப் பார்த்த நீதிபதி கிருபாகரனும் பாஸ்கரனும் கண்ணீர் விட்டார்கள்.

பின்னர், சிறுவனை காப்பகத்தில் சேர்க்க விருப்பமா என நீதிபதிகள் கேட்டபோது, திருமேனி – சசிகலா தம்பதி மறுத்துவிட்டனர். பாவேந்தனை காப்பகத்தில் பராமரிக்கும் ஊழியர்கள் உண்மையான பாசத்துடன் பராமரிப்பார்களா என்ற ஐயத்தால் இதற்கு மறுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது மனைவி சசிகலாவுக்கு காட்டுமன்னார்கோவிலில் ஷர்மிளா மருத்துவமனையில் மருத்துவர் அங்கையர்கண்ணியின் உதவியாளர்கள்தான் பிரசவம் பார்த்ததாகவும், அதில் தவறு நேரிட்டிருப்பதாகவும் திருமேனி புகார் கூறினார்.  பாவேந்தனின் நிலை குறித்து மருத்துவர் அங்கையர்கண்ணியிடம் ஏற்கனவே முறையிட்டபோது, அவர் தங்களை மிரட்டி அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, கருணைக்கொலை குறித்த வழக்கு வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.