தந்தை சீரியஸ்: பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்!
சென்னை:
ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து வரும் திங்கட்கிழமை அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு கடந்த 2017ம் ஆண்டு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அவர்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதைக் கருத்தில் கொண்டு ஒரு மாத பரோலில் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்
இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனையடுத்து பேரறிவாளன் வரும் திங்கள்கிழமை முதல் ஒரு மாத பரோலில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.