மென்லோ பார்க், கலிஃபோர்னியா

முகநூலில் தற்போது நடைபெற்றுள்ள விவரங்கள் திருட்டை சரி செய்ய ஒரு சில ஆண்டுகள் ஆகும் என முகநூல் உரிமையாளர் மார்க் ஜுகர்பர்க் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பலரால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளம் முகநூல் ஆகும்.   சமீபத்தில் அமெரிக்க நிறுவனமான கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா அதிபர் தேர்தலுக்காக முகநூல் உபயோகிப்போர் விவரங்களை திருடி உபயோகப் படுத்தியதாக தகவல் வெளியாகியது.   முகநூல் உரிமையாளரான மார்க் ஜுகர்பர்க் இதை ஒப்புக் கொண்டார்.

இதையொட்டி முகநூலை விட்டு விலகுவதாக பலர் அறிவித்தனர்.   மேலும் டிவிட்டரிலும் முகநூலை விட்டு விலகுகிறேன் என்னும் ஹேஷ்டாக் # மிகவும் பிரபலமாகியது.    இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக் முகநூலில் விவரங்கள் திருடப்பட்டதால் அந்த நிறுவனம் பிரச்சினையில் சிக்கிக் கொண்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகநூல் அதிபர் மார்க், “விவரங்கள் திருடப்பட்டதை சரி செய்ய மூன்று அல்லது ஆறு மாதங்களில் சரி செய்ய முடியலாம்.  ஆனால் இதன் ஆணி வேரைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்கு நிச்சயமாக சில வருடங்கள் தேவைப் படும்.   அதாவது இந்த திருடப்பட்டதை முழுமையாக சரி செய்ய சில வருடங்கள் ஆகும்.

முகநூல் குறித்து டிம் குக் அளித்துள்ள விமர்சனங்கள் தவறானவை.   நான் அது குறித்து வாதிட விரும்பவில்லை.   தேவை இல்லாத விமர்சனங்கள் செய்பவர் மீது நாம் அதிக கவனம் செலுத்தக் கூடாது.   அதுவும் அவருடைய கருத்துக்கள் உண்மையற்றவையாக இருக்கும் போது நிச்சயம் கண்டுக்கொள்ளக் கூடாது. ” என தெரிவித்துள்ளார்.