வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக 13 ரஷ்யர்கள் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றச்சாட்டு பதிந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் தேர்தல்  நடைபெற்றது.   இதில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.   அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார்.    இதையொட்டி அமெரிக்காவில் கடும் சர்ச்சை எழுந்தது.

இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷ்யாவின் தலையீடே முழுக்காரணம் எனக் கூறப்பட்டது.   இதே கருத்தை அமெரிக்க புலனாய்வுத் துறையும் தெரிவித்தது.    இந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதின்,  மற்றும் ட்ரம்ப் ஆகியோர் மறுத்துள்ளனர்.    ஆயினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ  இது குறித்து  ராபர்ட் முல்லர் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில் ரஷ்யர்கள் 13 பேர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.   அந்த ரஷ்யர்கள் மீது இணைய வழி மோசடியில் ஈடுபட சதி செய்ததாதவும், மோசமான அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது தவிர மூன்று ரஷ்ய நிறுவனஙகள் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் அதிபர் ட்ரம்பிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.     ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த 2014 ஆம் ஆண்டில் நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்கும் முன்பே ரஷ்யா தனது அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கி உள்ளது.   அந்த பிரசாரம் அதிபர் தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.    எந்த ஒரு தவறையும் ட்ரம்ப் பிரசாரக் குழு இழைக்கவில்லை”  என பதிவிட்டுள்ளார்