ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி :  அமெரிக்கா பரிந்துரை

வாஷிங்டன்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் கூறி உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 2.89 கோடி பேர் பாதிக்கப்பட்டு 5.18 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1.93 கோடி பேர் குணமாகி இப்போது 91.17 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை பிஃபிசர் நிறுவன தடுப்பூசியும் மாடர்னா நிறுவன தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.  ஊசி போட வேண்டியோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் மூன்றாம் நிறுவன தடுப்பூசி குறித்து அரசின் உணவு மற்றும் மருந்துக் கழகம் பல சோதனைகள் நடத்தி வருகின்றன.

அவ்வகையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசி வழக்கமான இரு டோஸ்களுக்கு பதில் ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் திறன் கொண்டது என அந்த கழகம் அறிவித்துள்ளது.   இந்த தடுப்பூசி கடுமையான கொரோனாவை தடுப்பதில் 66% திறனுடனும், சாதாரண கொரோனாவை தடுப்பதில் 85% திறன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் பரிந்துரை இறுதியானது அல்ல என்பதால் மருந்து ஒப்புதல் அமைப்பின் உறுப்பினர்கள் நாளை கூடி இது குறித்து விவாதிக்க உள்ளனர்.  இந்த விவாதத்தின் அடிப்படையில் ஒப்புதல் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.