குழந்தை நோய் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள முதல் வீடியோ கேம்!

வாஷிங்டன்: குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD எனப்படும் கவனக்குறைவு ஹைபர்ஆக்டிவிட்டி கோளாறுக்கான சிகிச்சையில், வீடியோ கேம் அடிப்படையிலான முதல் சிகிச்சையை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம்(FDA) அனுமதித்துள்ளது.

EndeavorRx என்ற பெயரிலான அந்த வீடியோ கேம், கடந்த திங்கட்கிழமை ஒரு சிகிச்சை முறையாக அங்கீகரிக்கப்பட்டது. 8 வயது முதல் 12 வயதிலான ADHD குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை முறை ஏற்றதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், பிறவகையான சிகிச்சைமுறைகளுடன் இணைந்து, அதாவது கிளினிக்கல்-வழிகாட்டு சிகிச்சைகளுடன் இணைந்து, இந்த வீடியோ கேம் சிகிச்சையும் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

ADHD என்பது ஒரு பொதுவான நரம்பு தொடர்பான கோளாறாகும். இது குழந்தைப் பருவத்தில் கண்டறியப்பட்டு, பெரியவர்கள் ஆகும் வரையில் நீடிக்கும்.

தோராயமாக, 6 முதல் 11 வயதுக்கு இடையிலுள்ள 40 லட்சம் குழந்தைகள் ADHD பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது கவனக்குறைவு பிரச்சினையையும், நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் தொடர்பான நோய்க்காக FDA அங்கீகரித்துள்ள முதல் விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை முறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.