சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கே.சி. பழனிச்சாமி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் என அதிமுக தெரிவித்தது.

இது குறித்து கே.சி. பழனிச்சாமி கூறுகையில், ‘‘ நீக்கம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் எனக்கு தரவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவை கண்டு அச்சப்படுகின்றனர். அதனால் தான் இந்த ஜனநாயகமற்ற முடிவை எடுத்துள்ளனர். எந்த இடத்தில் அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளை மீறினேன் என்பதை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் விளக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அதிமுகவின் பதவிகள் தொடர்பான திருத்தத்தை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளரும் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளரும் கிடையாது. எப்படி அவர்கள் என்னை நீக்க முடியும். நாளை அதுதொடர்பான ஆதாரங்களை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிடுவேன்.

ஜெயலலிதா காவிரியின் உரிமையை உண்ணாவிரதம் இருந்து பெற்றுக் கொடுத்தார். ஆனால் இவர்கள் இருவரும் செய்தது என்ன? ஓ.பன்னீர்செல்வத்திற்கு வேண்டும் என்றால் மோடியின் மீது பயம் இருக்கலாம். ஏனெனில் அவர் மீது கொள்ளை மற்றும் ஊழல் வழக்குகள் இருக்கலாம். எனக்கு அதுபோன்ற பயம் எதுவும் கிடையாது. நான் எம்.ஜி.ஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. ஆக்கப்பட்டேன்.

தேர்தல் ஆணையத்தில் சசிகலாவிற்கு எதிராக மனு அளித்தது நான் தான். அன்று சசிகலாவிடம் கைகட்டி காலில் விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தின் நன்மைக்காக அதிமுக, மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று தான் கூறினேன். அவர்கள் மோடிக்கு பயந்து எனக்கு எதிரே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்ப்டட போது இவர் மிக உறுதுணையாக இருந்துள்ளார். அணிகள் இணைப்புக்கு பின்னர் செய்தி தொடர்பாளராகவே தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.