கைது செய்யப்படலாம் என்ற பயம்: ஆளுநர் பன்வாரிலாலுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு

சென்னை:

ர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எச்.ராஜாமீது பல்வேறு வழக்குகள் பாய்ந்துள்ள நிலையில், இன்று திடீரென ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

சமீபத்தில் கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எச்.ராஜாவையும் கைது செய்ய காவல் துறையினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கைதை தவிர்க்கவே ஆளுநரை எச்.ராஜா சந்தித்து பேசியிருப்பதாக கிண்டி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது,  உயர்நீதிமன்றம் தடையை ஏற்க மறுத்து தகராறு செய்த எச்.ராஜா, அப்போது உயர்நீதி மன்றத்தையும், காவல்துறையினர் குறித்தும் தாறுமாறாக பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இதையடுத்து, சென்னை உயர்நீதி மன்றம் எச்.ராஜாமீது சுமோட்டோ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் புதுக்கோட்டை காவல்துறையினர் உள்பட பல இடங்களில் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இநத நிலையில்,  இன்று திடீரென சென்னை வந்த எச்.ராஜா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

ஆனால், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தமிழகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வரும் ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான், ஆளுநரை சந்தித்து எச்.ராஜா முறையிட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத  தகவல்கள் உலா வருகின்றன.