புதுடெல்லி:

நாட்டை அச்சம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தை அகற்றிவிட்டு இந்துத்வாவை செயல்படுத்தும் அபாயம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.


ரூபா பதிப்பகம் வெளியிட்ட ‘இந்தியாவின் கொள்கை’ என்ற நூலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது;

இந்தியாவின் கொள்கை நம் தலைவர்களால் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை நாம் மீட்டெடுக்க மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது. மீண்டும் மகாத்மாக காந்தி தேவைப்படுகிறார்.

தற்போது அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு அம்சமும் தாக்குதலுக்குள்ளாகிறது.
குறிப்பாக, சுதந்திரம், சமத்துவம், மதசார்பின்மை, தனிச் சுதந்திரம் ஆகியவை மீது இந்த தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்துத்வா கொள்கையை புகுத்தி இந்திய அரசியல் சாசனத்தை மாற்றியமைக்கும் அபாயம் நடக்கிறது.
ஒவ்வொருவரும் அச்சத்திலேயே வாழ்கின்றனர். பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் குறிப்பிட்ட கலாச்சாரத்தை செயல்படுத்த முயற்சி நடக்கிறது.
எதிர்கட்சி தலைவர்களை எதிரிகளாக பாவித்து பாஜக செயல்படுகிறது.

நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்திய அரசியலின் தவிர்க்கமுடியாத சக்தி. கட்சியை ஏற்றாலும், நிராகரித்தாலும் காங்கிரஸ் இந்திய மக்களுக்கான கட்சி.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றதுபோல், சில சமயங்களில் அதிசயம் நடப்பதுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.